மண்டியிடாத மறத்தமிழ் வேந்தே..!!! மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..

Saturday, November 26, 2011 ·



தமிழீழ தேசமது...
இருள் மூடி கிடந்தாலும் - தமிழர்  நாம்
இழிநிலை அடைந்தாலும்  
அருவமாய் உருவம் காட்டும்
இறையே... !!!

நின்னை,,
நின் பிறப்பெடுத்த நாளில் மட்டும்
நினைப்பதில்லை - என்றும் எம்  
விழியோடு கண்ணீராக...,
இதயக்கூட்டிலே துடிப்பாக...,
இரத்த நாளங்களில் செங்குருதியாக...,
கணப்பொழுதிலும் எம்முடன் தானே...!

கலங்கின கலக்கம் என்ன...?
கலக்கிய துலக்கம் என்ன...?
கண் பார்த்து..,
செவி கேட்டு..,
இதயம் உறைந்து போனாலும்...,
அறிவு ஏற்க போவதில்லை...!!!
கல்லை கடவுள் என்று 
கண் நம்பி, கை கூப்புவது..
கட்டாயம் உண்மை என்றால்
நின் வாழ்வும் மெய்மையே..!!!

அஞ்சிடா புலித்தலைவனே...!!
அகராதி போதாது உன் புகழ் பாட..
ஒற்றைத்தலைவனே..!!! 
ஒரு மொழி போதாது நின் வரலாறு  பாட 

அகவைகள் ஐம்பத்தேழு அல்ல..
அகவைகள் ஆயிரம் ஆனாலும் - என்றும் 
தமிழினத்தின் கலங்கரை விளக்கம் நீங்களே ..!!!!


கரிகால பெருஞ்சோழா....!!!
உன் வீரம் வாங்கி  
கையிலே துப்பாக்கி ஏந்தி - களமாடிய 
காவிய நாயகர்கள் - இன்று
கை கட்டி வாய் பொத்தி 
சிங்களவனின் காலடியில் 
சிறுமைத்தனமாய் அடிமைகளாகி
வாழ்வதை தொலைக்க..
வாழ்வு என்ற ஒன்றே கசப்பாகி போன..
அந்த உத்தம வீரர்களின் மானம் காக்க..

தமிழினத்தாலேயே வேறு கண் கொண்டு நோக்கி,,
விளிக்கப்படும்  "முன்னாள் போராளிகள்" என்ற 
வில்லங்கமான அடைமொழி நீக்கிட..

விரைவாக உங்கள் உயிர்ப்பு..!!! 
விளங்க வேண்டும் உலகிற்கு..

மண்டியிடாத மறத்தமிழ்  வேந்தே..!!!
மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..!!
மடையர்களின் மண்டை கலங்க வெகு விரைவில் 
நின் வரவு உறுதியாகும் நாளை எதிர்பார்ப்புடன்....

அரசி 

Post a Comment